மட்டு விமானப்படைக்கு அருகாமையில் உள்ள வீதியில் வைத்து இராணுவத்தினர் என்று கூறிக்கொண்டு வந்த இரு இளைஞர்களால் வேலைக்கு சென்ற நபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று (08) மாலை அரையம்பதி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வீடு ஒன்றிற்கு, அலுமினிய பொறுத்து வேலைகள் செய்வதற்காக, மட்டக்களப்பு விமானப்படைக்கு அருகாமையில் வைத்து, பாடசாலை விட்டு வந்த மாணவி ஒருவரிடம் வலையறவு பாலத்திற்கு செல்லும் வழியை கேட்டுள்ளார்.
குறித்த மாணவியும் வீதி ஒன்றை காண்பித்து இந்த வழியாக செல்லுங்கள் என்று கூற, குறித்த நபரும் காண்பித்த வழியில் பயணத்தை தொடர்ந்துள்ளார். இவ்வாறு சென்று கொண்டிருந்த நபரின் மோட்டார் சைக்கிளை சாதாரண உடை அணிந்திருந்த இரு இளைஞர்கள் யமாக பேசர் (Yamaha Fazer) மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்துள்ளனர்.
எதற்க்காக வழி மறிக்கிறீர்கள் என்று குறித்த நபர் அந்த இளைஞர்களிடம் வினவ, அந்த பெண்ணிடம் என்ன பேசினாய் கேட்டு மிரட்டியதுடன், நாங்கள் இராணுவத்தினர் என்று கூறி அணிந்திருந்த முகக்கவசத்தினால் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த இடத்திலிருந்து, வேறு வழியாக வலையறவு பாலத்திற்கு செல்ல மாற்று வழியை கேட்டறிந்து, அந்த வழியாக சென்று கொண்டிருந்த போது மீண்டும் அந்த நபரை வந்து வழி மறித்த இளைஞர்கள் மீண்டும் தாக்கியுள்ளார்.
இவ்வாறு இராணுவத்தினர் என்று கூறி மீண்டும் மீண்டும் இளைஞர்களால் தாக்கப்பட்ட நபர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தை தஞ்சமடைந்து நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால் தாக்கியவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தை கவனிக்கவில்லை என்று நபர் கூறிய காரணத்தினால், முறைப்பாடு பதிவு செய்வதற்கு சம்பவ இடத்தின் விலாசமாவது தேவை
என்று பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்ததுடன், பாதிக்கப்பட்ட நபரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட இடத்தின் விலாசத்தை கேட்டறிந்து கொண்டு வருமாறு பொலிஸார் திருப்பி அனுப்பியதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.