ஜேவிபி போன்ற கட்சிகள் நாட்டை மிக மோசமாக அழிக்கின்ற பல திட்டங்களை வகுக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கரமசிங்கவின் காரியாலயம் திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இளைஞர்கள் மத்தியில் தற்போது இருக்கின்ற கசப்பான சூழ்நிலையை முன்னிறுத்தி, போலி முகநூல்களை பயன்படுத்தி குறிப்பாக ஜேவிபி போன்ற கட்சிகள் மிக மோசமாக நாட்டை அழிக்கின்ற பல திட்டங்களை வகுப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம்.
நாடு பொருளாதார ரீதியாக பற்றி எரிகின்ற போது எங்களுடைய சிலரும் ஜனநாயகத்தை அழிப்பதற்காகவும், பாராளுமன்றத்தை அழிப்பதற்காகவும் ஏன் மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல் காரியாலயங்களை அழிப்பதற்காகவும் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தினார்கள்.
இளைஞர்களை உசுப்பேத்தி, அவர்களுக்கு பிழையான வழியை காட்டி இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று சில கட்சிகள் பிழையாக வழிநடத்துகின்றார்கள். இவர்களை தோற்கடித்து சரியான ஜனநாயக இயக்கத்தின் ஊடாகவும், மக்களின் ஆணையின் ஊடாகவும் மற்றும் எதிர்கால நம்பிக்கை இன்மையின் காரணமாக நாட்டை அழிக்க நினைக்கின்ற சக்திகளோடு கூட்டு சேர்ந்து இருக்கின்ற இளைஞர்களுக்காகவும் நாங்கள் ஒன்றாக பாடுபட்டு, அவர்களுக்கான எதிர்காலத்தை கட்டி எழுப்ப வேண்டும்.
இவ்வாறான இளைஞர்களை அந்த கட்சியின் பால் இருந்து, மீட்டெடுத்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிப்பதற்கு தூண்ட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.