மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான சைகை மொழி பயிற்சிநெறி, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சிநெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பொது நிர்வாக அமைச்சின் நிதி அனுசரணையில் மூன்று மாத காலத்தை உள்ளடக்கியதாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் இப் பாடநெறியை கற்க முடியும். கற்கை நெறிக்கான பிரதான வளவாளரான ஓய்வு நிலை பிரதி கல்வி பணிப்பாளர் தயாநந்தன் மற்றும் சைகை மொழி பயிற்சி வளவாளராக வாழ்வோசை பாடசாலை அதிபர் சி.ஏ.தயாமதி ஆகியோரும் ஆரம்ப நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.சிவகுமார், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் ச.கோணேஸ்வரன், வை.எம்.சி.ஏ நிறுவன பதில் பொது செயலாளர் எஸ். பற்றிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.