சமீப காலமாக சாட்ஜிபிடியின் அதீத வளர்ச்சியை நாம் ஒவ்வொருவரும் பார்த்து வருகிறோம். நாள்தோறும் தினுசு தினுசாக சாட்ஜிபிடியை வைத்து ஏதாவதொரு செய்தி வெளியாகி வருகிறது. ஓப்பன் ஏஐ (Open AI) என்னும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட சாட்ஜிபிடி, சில மாதங்களில் உலகளவில் பிரபலமடைந்துவிட்டது.
தொழில்நுட்பத்துறையை கடந்து, கல்வி, மருத்துவம், சினிமா, விவசாயம் என்று அனைத்து துறைகளிலும் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கிவிட்டது. சொல்லப்போனால், அனைத்து துறைகளிலும் சாட்ஜிபிடியின் பங்கு தேவைப்படும் என்பதே உண்மை. இதற்கேற்பவே அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் இருக்கின்றன. கலை, கணிதம், அறிவியல் என எந்தத் துறையில் இருந்து, எந்த கேள்வியை கேட்டாலும் சாட்ஜிபிடி ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்களை அளிக்கிறது. இந்த பதில்கள் மிகவும் நேர்த்தியாக இருப்பதால் பல்வேறு இடங்களில் பலருக்கு உதவியாக இருக்கிறது. இப்போது, மருத்துவர்களிடமும் சென்று சேர்ந்துவிட்டது.
ஆனால், மருத்துவர்கள் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. பொதுவாக மருத்துவர்கள், நாள்தோறும் ஈக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனென்றால், யாராவது, விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டாலோ, யாருக்காவது ஆப்ரேஷன் செய்ய வேண்டுமென்றாலோ அல்லது யாராவது நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்றோ அவர்களிடமோ அவர்களது உறவினர்களிடமோ எடுத்துக்கூறும்போது, மிகுந்த சங்கடத்தை சந்திப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு கனிவாக வார்த்தைகள் மிகுந்த அவசியமாகும்.
இல்லையென்றால், வார்த்தைகளே பாதிக்கப்பட்டவர்களை உடைந்து போக செய்துவிடும். இதுவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் உயிர் பிழைப்பது கடினம் என்றால், அதை உறவினர்களுக்கு சொல்லி புரிய வைக்க மருத்துவர்களே மனதளவில் பாதிக்கப்பட்டுவிடுவார்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு சாட்ஜிபிடியின் வருகை மிகப்பெரும் உதவியாக மாறியிருக்கிறது.
அமெரிக்காவில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், நோயாளிகள் அல்லது விபத்து ஏற்பட்டவர்கள் குறித்த சங்கடமான செய்திகளை, அவர்களிடமோ அல்லது அவர்களின் உறவினர்களிடமோ தெரிவிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்த அறிந்த கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள், இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தி முடித்தனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் வியப்பை தரும்படி இருக்கின்றன. அதாவது, வழக்கமாக மருத்துவர்களே வழங்கும் சங்கடமான செய்திகளையும், சாட்ஜிபிடி மூலம் எழுதப்பட்ட செய்திகளையும் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். இதில் சாட்ஜிபிடி மூலம் எழுத்தப்பட்ட வார்த்தைகள் மருத்துவர்களின் வார்த்தைகளைவிட கனிவாகவும், நெகிழ்வாகவும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் சாட்ஜிபிடியை பயன்படுத்துவதில் எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை