கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான ஏழு மாதங்களில் கலால் திணைக்களம் 122 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமான இலக்கு 230 பில்லியன் ரூபாவாகும் அத்தோடு கலால் அனுமதிகளை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கலால் உரிமங்கள் அரசியல் நோக்கத்துடன் வழங்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், இது ஜனாதிபதி தேர்தலுக்காகவோ அல்லது வேறு எந்த அரசியல் நோக்கத்துக்காகவோ வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் மாத்திரம் 1500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி மற்றும் பிற காரணங்களால் கலால் உரிமங்களை வழங்கி அரசின் வருவாயை அதிகரிக்க அரசு முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.