ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி முன்னாள் ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின்படி, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக கடிதம் ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னராக, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த ஹரின் பெர்ணான்டோ ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்ததுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்அரசாங்கத்திற்கு ஆதரவளித்திருந்தார்.
இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்த ஹரின் பெர்னாண்டோ கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானத்தைச் செல்லுபடியற்றதாக உத்தரவிடுமாறு கோரி அவர் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தத் தீர்மானம் சட்டரீதியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் ஹரின் பெர்னாண்டோ அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகராக மனுஷ நாணயக்காரவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.