பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் சிவில் பாதுகாப்புப் படையணியானது கடந்த முப்பது வருடகால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியது. அத்தோடு நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சமூகத்தின் நல்வாழ்விற்கும் மிக முக்கியமான பணியை ஆற்றி வருகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு, வீடற்ற உறுப்பினர்களுக்கு வீடு கட்டித் தருவதற்கும், ஏற்கனவே உள்ள வீடுகளை சீரமைப்பதற்கும், இந்த படையின் மூலம் தேவையான தொழிலாளர் பங்களிப்பை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய சிவில் பாதுகாப்பு படையணியின் 100 உறுப்பினர்களுக்கு இந்நிவாரணம் வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக இந்த படையணியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான உதவித் தொகையை 500 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் வாழ்க்கை நிலைமையை ஸ்திரப்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.