அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு 27 அங்குலம் நீளமானது.
அத்துடன் தற்போது வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் அரச அச்சகத்தில் பாதுகாப்புடன் இடம்பெற்று வருகின்றது.
அரச அலுவலகங்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டுகளின் விநியோகம் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
அதேநேரம் வாக்காளர் அட்டைகளின் அச்சிடல் பணிகள் இடம்பெற்றுவருவதுடன் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
தற்போது தேர்தல் வன்முறைகள் குறைந்த மட்டத்திலேயே இடம்பெறுகின்றன.இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து பேண உதவுங்கள்” என்றார்.