நெற்பயிர்ச் செய்கைக்கான உரம் கொள்வனவு செய்வதற்கான உர மானியத்தை அடுத்த வருடம் முதல் 10,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மை காணப்படுவதால் உர மானியத்துக்காக வழங்கப்படும் தொகையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த அமைச்சர், அடுத்த வருடத்தின் யால பருவத்தில் இருந்து உர மானியத் தொகையை 30000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படப்போகும் உரம் அடுத்த இரண்டு பருவங்களில் 55,000 மெற்றிக் தொன் எம்ஓபி உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், விவசாயிகளுக்கு தேவையான எம்ஓபி உரம் முழுவதையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உர மானியத்தை 30,000 ரூபாவாக உயர்த்தினால் 30 பில்லியன் ரூபாவே செலவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.