இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் (பிஎல்எல்) மற்றும் இலங்கையின் எல்டிஎல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், ஆகிய இரண்டு நிறுவனங்களும், இலங்கைக்கான திரவ இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் எல்என்ஜி விநியோகத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மல்டிமொடல் ஐஎஸ்ஓ கொள்கலன் விநியோகச் சங்கிலி மூலம் எல்என்ஜி விநியோகத்தை உள்ளடக்கிய புதுமையான தீர்வை வழங்குவதில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள கெரவலப்பிட்டியவில் எல்என்ஜி என்ற திரவ இயற்கை எரிவாயுவை இறக்குதல், சேமிப்பு மற்றும் மறு எரிவாயு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள சோபதனவி மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தி வசதிகளுக்காக. இந்தியாவின் கொச்சி எல்என்ஜி டெர்மினலில் இருந்து எல்என்ஜியை வழங்குதல் ஆகியவை இந்த உடன்படிக்கைக்குள் வருகின்றன.
இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்தியஞ்சல் பாண்டே மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் இந்த கைச்சாத்திடல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த ஒத்துழைப்பு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி பங்காளித்துவத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.