அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெற்றோலியம் பிரைவேட் லிமிடெட், யுனைடெட் பெற்றோலியம் லங்கா நிறுவனத்தின் கீழ் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒகஸ்ட் 28 முதல் இலங்கையில் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் செயல்பாடுகளுக்கான எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே வந்துவிட்டதாகவும், இறக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.
யுனைடெட் பெற்றோலியம் நிறுவனம், 20 நிரப்பு நிலையங்கள் வழியாக எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ளவுள்ளது.
முன்னதாக, யுனைடெட் பெற்றோலியம் லங்கா பிரைவேட் இலங்கை சந்தையில் பெற்றோலியப் பொருட்களை வழங்குவதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இலங்கை முதலீட்டுச் சபையுடன், 2024 ஜூன் 4 அன்று ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 150 நிரப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு எரிபொருள் விநியோகத்துக்காக, யுனைடெட் பெற்றோலியத்தை அனுமதித்துள்ளது.
அத்துடன் மேலும் 50 புதிய நிலையங்களை, அமைக்கவும் குறித்த நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
LIOC, Sinopec, RM Parks-Shell ஆகிய நிறுவனங்களுக்குப் பிறகு இலங்கை சந்தையில் நுழையும் நான்காவது நிறுவனம் யுனைடெட் பெற்றோலியம் பிரைவேட் லிமிடெட் என்பது குறிப்பிடத்தக்கது.