தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அரசு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தலைநகா் ஜபுரோனுக்கு 500 கி.மீ. வடக்கே, கரோவி பகுதியுள்ள சுரங்கத்தில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனம் 2,492 கரட் வைரத்தை வெட்டி எடுத்துள்ளது. இது, நாட்டில் வெட்டி எடுக்கப்பட்ட வைரத்திலேயே மிகப் பெரியது ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடா நாட்டைச் சோ்ந்த லுகாரா டயமண்ட் கோப்பரேஷன் என்ற நிறுவனமே குறித்த இந்த வைரத்தை வெட்டி எடுத்துள்ளது. தனது அதிநவீன எக்ஸ்-ரே தொழில்நுட்பத்தின் மூலம் அந்த வைரம் கண்டெடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது உலகின் இரண்டாவது பெரிய வைரம் ஆகும். இதற்கு முன்னா் தென்னாப்பிரிக்காவில் கடந்த 1905-ஆம் ஆண்டு வெட்டி எடுக்கப்பட்ட 3,106 கரட் வைரம்தான் உலகின் மிகப் பெரிய வைரம் ஆகும்.