இன்று (28) முதல் நாளொன்றுக்கு 1,000 கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு அருகில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல நாட்களாக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பல நாட்களாக இவ்வாறு தங்கியிருப்பவர்களுக்கு டோக்கன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குடிவரவுத் திணைக்களம் வசம் வைத்திருக்கும் வெற்று கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதால், குடிவரவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக வரிசைகள் அமைக்கப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்படும் வரை ஒக்டோபர் மாதம் வரை இந்நிலை தொடரும் என்பதால் அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், அந்த கோரிக்கைகளை மீறி இன்று காலை அதிகமானோர் அந்த இடத்திற்கு வந்தனர்.
இதேவேளை, வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அரசாங்க அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.