தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் எப்போதும் கணவனும், மனைவியும் போன்று தான் இருப்பார்கள். தேர்தல் வந்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தமிழருக்கு எதிராக பேசுவார்கள்.
இவ்வாறாக பேசி தத்தமது பக்கம் உள்ள இனரீதியாக சிந்திக்கின்ற மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதை நாம் காண்கின்றோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தவிசாளரும் உலமா கட்சி தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அண்மையில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் விசேட செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,
முஸ்லிம் சமூகம் உசுப்பேத்தும் அரசியலுக்கு அடிமையாக இருப்பதை காண்கின்றோம். தேர்தல் அல்லாத காலங்களில் இனவாத அரசியலை விரும்ப மாட்டார்கள். இன ஐக்கியம் என்பார்கள். ஆனால் தேர்தல் காலங்களில் வேண்டுமென்றே மக்களை உசுப்பேற்றி தங்களுக்கு வாக்குகளை பெறுவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இனவாதத்தை முஸ்லீம்கள் மத்தியில் இணைத்து பிற இனவாதிகளை கொண்டு வந்து அவர்களை பேச வைத்தாவது இனவாதத்தை உருவாக்குவதை காண்கின்றோம். எனவே, தான் இவ்வாறான அரசியலை செய்ய வேண்டாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை கேட்கின்றோம் என தெரிவித்துள்ளார்.