சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (30) திருகோணமலை கடற்கரையில் உள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்த வெளி அரங்கிற்கு அண்மையில், பொலிஸாரின் தடையுத்தரவையும் மீறி காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் உட்பட பெருமளவிலானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது “எமது உறவுகளுக்கு நீதி வேண்டும”;, “காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே”, “சர்வதேச விசாரணையே வேண்டும”;, “காணாமல் போனோர் அலுவலகம் வேண்டாம்”, “மரணச்சாண்றிதழ் வேண்டாம்” போன்ற கோசங்களை எழுப்பியும், தமது உறவுகளின் புகைப்படங்கள், பதாதைகள் மற்றும் தீச்சட்டிகளை ஏந்தியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரட்ரிக் கோட்டை வீதி வழியாக வெலிக்கடை தியாகிகள் நினைவு திறந்த வெளி அரங்கிற்கு செல்ல முற்பட்டபோது பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டனர் இதனால் அவ்விடத்தில் சில மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் அங்கிருந்து திரும்பி வந்து கடற்கரை ஓரமாக வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு சென்று தீபச்சுடர் ஏற்றி காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதிகோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தபோது பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ரஜீவ்காந்த் என்பவரை விடுதலை செய்யக்கோரியும் விடுதலை செய்யும்வரை அவ்விடத்தில் இருந்து நகரமாட்டோம் என அவ்விடத்தில் அமர்ந்தவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிசாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் விடுதலை செய்யப்பட்ட பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களின் தலைவிமார்களினால் மகஜர் ஒன்றும் வாசிக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட மறைமாவட்ட ஆயரின் ஊடாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்குமாறு அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த அருட்தந்தையர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது சிவன் கோவிலடியில் இருந்து ஆரம்பித்து வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த நிகழ்வுக்கு தடை விதிக்கக்கோரி நேற்றையதினம் திருகோணமலை தலைமைப் பொலிஸாரினால் கிண்ணியா சுற்றுலா நீதிமன்றில் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
30.08.2024 அன்று திருகோணமலை பிரதேசத்தில் ஓர் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெறப்போவதாகவும் அது சமாதானத்திற்கு பங்கம் விளைவிப்பதாகவும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் மிக்கதாகவும், இனங்களுக்கிடையே முறுகல் நிலைமை ஏற்படப்போவதாகவும் இதன்மூலம் சமாதாக குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் 1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் படிமுறைக் கோவையின் 106(1)இன் கீழும், 106(3)இன் கீழும் குறிப்பிட்ட ஆர்ப்பாட்டத்தினை தடைசெய்யுமாறும், ஓர் தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் நீதிமன்றில் விண்ணப்பம் செய்ததன் அடிப்படையில் கிண்ணியா சுற்றுலா நீதிமன்ற நீதிபதியினால் குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது நீதிமன்றானது அரசியலமைப்பிலே பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற பேச்சுரிமை, கருத்துரிமை ஒன்று கூடும் சுதந்திரம் என்பன மழுங்கடிக்கப்படாமல் இருக்கின்ற வகையில் இத்தடை உத்தரவு இருக்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் கவனமாக இருக்கின்றது எனவே அரசியலமைப்பிலே ஓர் பிரஜைக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாக்கின்ற அதே நிலையில் பொதுமக்களுக்கும், பாதுகாப்பிற்கும், இனங்களுக்கும் இடையில் அச்சுறுத்தலும் பீதியும் ஏற்படுகின்ற போது அதனை தடை செய்கின்ற விதத்தில் நீதிமன்றம் இக்கட்டளையை பிறப்பித்துள்ளது.
எனவே பொலிஸார், குறித்த நிகழ்வு சமாதான சீர்குலைவையும், இனங்களுக்கிடையில் முறுகல் நிலையையும், மக்களின் பாதுகாப்பு விடயத்தில் அச்சுறுத்தல் ஏற்படுமாக இருக்கும் என நம்பினாலோ அல்லது நம்பும் வகையில் அதற்கான நிகழ்வுகள் காணப்படுமாக இருந்தால் குறித்த விடயத்தை, மன்று தடை செய்கின்றது என குறித்த தடையுத்தரவில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.