கனேடிய அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிர்வாக முடக்கங்களும் சில போராட்டங்களும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிர்வாக முடக்க நடவடிக்கையானது இன்றைய தினம் (23.06.2023) ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு காந்திபூங்காவின் முன்பாகவும் சிலர் பதாகைகளையும் கருப்புக்கொடியையும் ஏந்தியவாறு போராட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
போராட்டத்துக்கான காரணம்
சில நாட்களுக்கு முன்னர் கனேடிய பிரதமர் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்று கூறியிருந்தார்.அதனால் இலங்கையின் முக்கிய பெரும்பான்மை அரசியல்வாதிகள் தாங்கள் இதனை மறுப்பதாகவும், கனடா இப்படி கூறியிருந்ததை மீளப்பெறவேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
பெரும்பாண்மை அரசியல்வாதிகள் கனடா பொய் கூறுவதாக குற்றம் சுமத்தியிருந்தாலும், தமிழ் தலைமைகள் கனடா இப்படி தெரிவித்திருந்தமையை ஆதரித்திருந்தது.
ஒருபக்கம் இப்படி நடந்து கொண்டிருக்க கனேடிய அரசாங்கம் இலங்கையில் நடந்ததது இனப்படுகொலை என்று தெரிவித்திருந்த கருத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதியில் காட்சிப்படுத்தல் பலகைகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், 6.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை அரை நாள் நிர்வாக முடக்கமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் அப் பிரதேசத்தின் பெருமளவான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததுடன் பிரதான இடங்களில் கறுப்பு கொடிகள் நடப்பட்டிருந்தது.
மட்டு நகர்ப்புறத்திலும் போராட்டம்
அதேசமயம் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இப்போராட்டம் சில நபர்களால் இன்று நடாத்தப்பட்டுள்ளது.
“பிரிவினைவாத ஆதரவு கனேடிய அரசு சுதந்திர இலங்கையின் இறையாண்மையில் தலையிடுவதை அருவறுப்போடு கண்டிக்கின்றோம்”என்று தெரிவித்திருந்தனர்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டது இனப்படுகொலை என்று கனேடிய பிரதமர் பேசியிருந்த கருத்துக்கு எதிராக தமிழர்கள் சிலரின் இந்த மோசமாக செயற்பாடு பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவதுடன் வடகிழக்கையும் தமிழ்,முஸ்லீம் மக்களியிடையே மீண்டும் பிரச்சனைகளை தோற்றுவிப்பதற்கும் ஒரு புதிய வியூகத்தை இலங்கை அரசு கையாள்வதாக சமூக ஆர்வலர்கள் சிலர் காட்டமான கருத்துக்களையும் முன்வைக்கின்றனர்.