இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்று கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக கொழும்பு மற்றும் மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
கொழும்பில் உள்ள கனேடியத் தூதரகத்திற்கு முன்பாக, சிங்கள ராவய அமைப்பின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கனடாவிற்கும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கும் எதிரான பதாகைகளை ஏந்தியவாறு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போர்க்குற்றத்தை இராணுவத்தினர் செய்யவில்லை என்றும், புலிகளே போர்க்குற்றத்தைச் செய்தனர் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
அத்துடன், மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவுக்கு முன்பாகவும் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
“ஜஸ்ரின் ட்ரூடோவே இலங்கையை விட்டுவிடுங்கள்”, “இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றம் புரியவில்லை” , “சுதந்திர நாடான இலங்கை, பிரிவினைவாத கனடா அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டிக்கின்றது”, “பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதுதான் கனடாவின் ஜனநாயகமா?” உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகளை அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 53ஆவது அமர்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் வழமையாக இடம்பெறும் போது இவ்வாறான போராட்டங்கள் அரச ஆதரவுக் குழுக்களின் ஏற்பாட்டில் கடந்த காலங்களிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.