நிர்வாக மற்றும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் குறித்த அறிக்கையில், தமிழ் மக்களின் உரிமைசார் பயணத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்களிப்புக்களை பாராட்டியுள்ளதுடன், சில விடயங்கள் தொடர்பிலான தெளிவுபடுத்தல்களையும் வழங்கியுள்ளனர்.
அதில் முக்கியமாக தமிழ் மக்களின் கூட்டு உணர்வுகளுடன் தொடர்புடைய தினங்களில் களியாட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்களிற்கு ஒப்புதல் வழங்குவதனையும், அவற்றினை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதனை தவிர்க்குமாறும், அன்றைய தினங்களில் பல்கலைக்கழக நாட்காட்டியில் நிகழ்வுகள் இடம்பெறாமையை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் திட்டமிட்டு இடம்பெறும் மறைமுகமான சிங்களமயமாக்கல் முயற்சிகளினால் தமிழ் மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
இப்படியாக தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் உரிமை மீறல்கள் தொடர்பிலான பல விடயங்களை தெளிவுபடுத்தி குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.