மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்ட நிறுவனங்கள் வெகுவிரைவில் உத்தியோகபூர்வகமாக அறிவிக்குமென இலங்கை தொழிலாளர் காங்ரஷின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ பகுதியில் (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான், “மறைந்த முன்னால் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் நம்பிக்கையோடு ஆயிரம் ருபாய் சம்பளத்திற்கு போராடி அந்த சம்பளத்தை பெற்றுக்கொடுத்தோம்.
1980ம் ஆண்டு மலையக மக்கள் சார்பாக சௌமியமூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டபோது ஏனைய இனத்தை சார்ந்த மக்களுக்கு வீடமைப்பு திட்டங்களை மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்த நிலையில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்றில் பிரேரனை ஒன்றை கொண்டு வந்தார்.
அந்த பிரேரனை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் வருடா வருடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்களுக்கு வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வந்தது 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 08ம் திகதி நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.
அந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜந்து வருடகாலப்பகுதியல் 4000ம் வீடுகள் கட்டப்பட்ட நிலையில் மலையகத்தில் 44வருடங்களில் 40ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
தற்பொழுது இரண்டு இலட்சத்துக்கு அதிகமான லயன் அறைகள் மலையகத்தில் காணப்படுகிறது.
தற்பொழுது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பத்தாயிரம் வீட்டுத்திட்டங்கள் மாத்திரம் உள்ளது நாங்கள் பல்வேறுப்பட்ட நிறுவனங்களோடு கலந்துரையாடி வீடமைப்புதிட்டங்களை அதிகரிப்பதற்கான முறையினை மேற்கொண்டு வருகின்றோம்.
மலையகத்திற்கான பல்கலைகழகம் தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் உதவியினை கோரியிருக்கின்றோம். பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளர்களாக உள்வாங்கும் நடவடிக்கை தொடர்பாக எமக்கு எவ்வித மாற்று கருத்துகளும் இல்லை அந்த விடயத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று குறுகிய காலப்பகுதியில் நாட்டில் காணப்பட்ட வரிசையுகத்தை இல்லாதொழித்து இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைத்துள்ளார்.
அதேவேளை நாட்டின் பொருளாதாரமும் அதிகரித்து காணப்படுகிறது. மக்களின் வாக்குகளை பெறுவதற்கு சிலர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.
இம் முறை ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க நாடளாவிய ரீதியில் அமோக வெற்றியினை பெறுவார்” என்றார்.
இந்த மக்கள் சந்திப்பில் இ.தொ.கா.வின் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட முன்னால் மத்திய மாகாணசபை உறுப்பினர் எஷ்.பிலிப்குமார் நோர்வூட் பிரதேசசபையின் முன்னால் உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.