புதிய இணைப்பு
நோயாளிகளுக்கு ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரிலான அடக்குமுறையினை கண்டித்தும் பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தியும் நேற்று (03) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் டாக்டர் தவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.
தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடன் நிறுத்து,தேசிய ரீதியான கொள்கையின்றி முறையற்ற ரீதியான மருத்துவக் கல்வியின் விரிவாக்கத்தினை உடன் நிறுத்து, சுயவிசாரணை ஒன்றை மேற்கொள்ளமுடியாத விசாரணைக்குழு எதற்கு?, வைத்தியதுறை தொடர்பான தொழில்நுட்ப அறிவு அற்ற விசாரணைக்குழு எதற்கு?, பொதுமக்களின் வாழும் உரிமைக்காக குரல் எழுப்பிய தொழிற்சங்க தலைவர்களை வேட்டையாடுவதை உடன் நிறுத்து, மருத்துவர்களுக்கு எதிரான அநீதியான ஒழுக்காற்று நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துபோன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது வைத்தியசாலைகளின் மருத்து பற்றாக்குறைகள் மற்றும் பௌதீக பற்றாக்குறைகள் ஏற்பட்ட சுகாதார துறைகள் பாதிக்கப்பட்டபோது அது தொடர்பில் மக்களுக்கு எடுத்துக்கூறிய தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக ஒரு நியாயமில்லாத ஒழுக்காற்று நடவடிக்கையினை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதன் காரணமாக எதிர்காலத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்ற விடயங்களை வெளிக்கொணர்வதை தடுப்பதற்காக தொழிற்சங்கங்களின் தலைவர்களின் குரல்வளைகளை நசுக்கும் செயற்பாடுகளாக காணப்படுகின்றது.இதன்காரணமாகவே இதற்கு எதிராக நாடு தழுவிய வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
முதல் இணைப்பு
தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (03) மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்று கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலங்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள், பின்னர் தமது கடமைகளை முன்னெடுப்பதற்காக திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.