நாட்டில் மதுபானம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவது தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை விசேட குழுவின் உறுப்பினர் ஜெயந்த சமரவீரவினால் 04.09.2024 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தப் பணியை நிறைவேற்றும் வகையில், இலங்கையில் மது, புகையிலை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து அரச நிறுவனங்களும் தலையிட்டதுடன், போதைப்பொருள் தடுப்புக்காகச் செயற்படும் பல சமூக அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இந்தப் பணிகளில் பங்களித்தன. இதில் ADIC முக்கிய பங்கு வகித்தது.
போதைப்பொருள் ஒழிப்புக்கான அனைத்து அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒரு வருடமும் ஒரு மாதமும் பாராளுமன்றத்தில் 11 முழு அமர்வுகளையும் 4 அரை அமர்வுகளையும் நடத்தி உண்மைகளை ஆராய்ந்து அவதானித்து இந்த விசேட அறிக்கையை தயாரித்துள்ளன.
இந்த அறிக்கையில், மது, புகையிலை மற்றும் பிற போதைப் பொருட்களைத் தடுப்பதற்கான சட்டச் சீர்திருத்தங்கள், நிர்வாகச் சீர்திருத்தங்கள், கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் ஊடக நெறிமுறைகள் மற்றும் சமூக ஊடகங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான தேவையை குறைப்பதற்கான பரிந்துரைகள், விநியோகத்தை குறைப்பதற்கான பரிந்துரைகள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கான மறுவாழ்வு மற்றும் சிகிச்சையை எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.