கடந்த 9 நாட்களில் 9158 பேர் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையத்தில் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் திரு.ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பிராந்திய செயலகங்கள் ஊடாக இணையவழி முறையின் மூலம் வழங்கும் வேலைத்திட்டம் கடந்த (15.06.2023)ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த தினத்தில் இருந்து 9 நாட்களில் 9158 விண்ணப்பங்கள் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு வந்துள்ளதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரரின் பெயரை பதிவு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள 51 பிராந்திய செயலகங்களில் அனைத்தையும் பார்வையிட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டிய கட்டுப்பாட்டாளர் நாயகம், உரிய கொடுப்பனவுகளை இணையம் மூலமாகவோ அல்லது இலங்கை வங்கியின் கிளைக்கு சென்று செலுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறைமையினால் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
15,000 நிகழ்நிலை(online) விண்ணப்பங்கள் மூலம் அவசர சேவைக்கு உள்வாங்கப்படும் கடவுசீட்டானது 03 நாட்களுக்குள் தபால் ஊடக அனுப்பப்படுவதோடு மற்றும் சாதாரண சேவை 14 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பப்படும் என்றும் இதற்கமைய அதற்காக ஒரு நாள் சேவைக்கு 20,000 ரூபாய் அறவிடப்படுவதோடு சாதாரண சேவைக்கு .ரூ. 5000 அறவிடப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.