முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் கடந்த மாதம் 16-08-2024 ஆம் திகதி 4 மின் விசிறிகள் திருடப்பட்டிருந்தது.
இதனையடுத்து பாடசாலை சமூகத்தினரால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து நேற்று (10) திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைவேலி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேகநபர் மின்விசிறிகளை களவாடி இரு நபர்களுக்கு தலா 3000 ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து மின்விசிறிகளை வாங்கிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் பொருட்களை விற்று அதிலிருக்கும் பணத்தினை போதை பொருளுக்கு பயன்படுத்தி வந்தமையும் குறிப்பிடதக்கது.