கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-503 விமானம், பறவை மோதியதைத் தொடர்ந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று (28) பிற்பகல் 12.55 மணியளவில் Airbus A330 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம் லண்டன் நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது. எனினும், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை மோதியதால் விமானம் மீண்டும் விமான நிலையத்திற்குத் திருப்பப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் 269 பயணிகளும் 15 பணியாளர்களும் உட்பட மொத்தம் 284 பேர் பயணித்துள்ளனர்.
பறவை மோதியதைத் தொடர்ந்து விமானி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, விமானத்தைப் பாதுகாப்பாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.
இதனையடுத்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், பயணிகளை மற்றொரு விமானத்தின் மூலம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பறவை மோதலினால் பாதிக்கப்பட்ட விமானம் தற்போது பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிறுவனத் தொடர்பாடல் பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.







