சாட்ஜிபிடி (ChatGPT) வந்தாலும் வந்தது, கூகுள் (Google) நிறுவனமானது தன்னால் முடிந்த எல்லா வகையான ஏஐ அம்சங்களை (AI Features) கட்டவிழ்த்துவிட்ட வண்ணம் உள்ளது. அதில் ஹெல்ப் மீ ரைட் (Help Me Write) என்கிற ஜிமெயில் (Gmail) அம்சம் மிகவும் கவனிக்கத்தக்கதாக உள்ளது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஹெல் மீ ரைட் என்பது, மிகவும் எளிமையான முறையில் இமெயில்களை உருவாக்க உதவும் ஒரு ஏஐ அம்சமாகும். சற்றே விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கொடுக்கும் ஒரு சில வார்த்தைகளை அடிப்படையாக கொண்டு ஹெல்ப் மீ ரைட் அம்சமானது உங்களுக்காக பல மாதிரியான இமெயில்களை எழுதி கொடுக்கும்.
அதில் உங்களுக்கு எது பொருத்தமானதாக தெரிகிறதோ, எது நீங்கள் சொல்ல விரும்புவதை வெளிப்படுத்தும்படி உள்ளதோ, அதை தேர்வு செய்து மற்றவர்களுக்கு இமெயில் ஆக அனுப்பலாம். கேட்கும் போதே சுவாரசியமாக இருக்கும் இந்த ஹெல்ப் மீ ரைட் அம்சமானது ஏற்கனவே டெஸ்க்டாப் வெர்ஷனில் அணுக கிடைக்கிறது. தற்போது இது மொபைல் ஆப்பிற்கும் வந்துள்ளது.
அதாவது பதிவுசெய்த டெஸ்டர்களுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-கான் ஜிமெயில் ஆப்பில் இப்போது ஹெல்ப் மீ ரைட் அம்சம் அணுக கிடைக்கிறது. டெஸ்க்டாப்பை போலவே, இந்த அம்சம் மொபைல் ஆப் வழியாகவும் மிகவும் எளிமையாக அணுக கிடைக்கிறது. ஒரு இமெயிலை கம்போஸ் செய்யும் போது, கீழ் வலது மூலையில் தோன்றும் “ஹெல்ப் மீ ரைட்” என்கிற பட்டன் தோன்றும். அதை கிளிக் செய்வதன் மூலம் கிரியேட் (Create) என்கிற பட்டனுடன் ஒரு ப்ராம்ப்ட் (Prompt) தோன்றும். அதனுள் நீங்கள் என்ன மாதிரியான இமெயிலை உருவாக்க விரும்புகிறீர்கள் என்பது தொடர்பான ஒரு சில வரிகளை, வார்த்தைகளை டைப் செய்யவும்.
பின்னர் கிரியேட் என்கிற பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவு தான். ஹெல்ப் மீ ரைட் என்கிற ஏஐ அம்சமானது உங்களுக்கான மெயிலை எழுதி கொடுக்கும். ஒருவேளை அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ரீஃபைன் (Refine) என்கிற பட்டன் வழியாக அதை “செம்மைப்படுத்த” முடியும்.
இதே அம்சத்தை டெஸ்க்டாப்பில் பயன்படுத்துவது எப்படி?
உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ஜிமெயிலை திறந்து ‘கம்போஸ்’ என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். பின்னர் கம்போஸ் விண்டோவின் (Compose Window) கீழே உள்ள ஹெல்ப் மீ ரைட் என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.
பின்னர் தோன்றும் ப்ராம்ட் பாக்ஸில், நீங்கள் அனுப்ப விரும்பும் இமெயில் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதற்கான சுருக்கமான விளக்கத்தை டைப் செய்யவும். எடுத்துக்காட்டாக, “விடுமுறை விண்ணப்பத்திற்க்கான மின்னஞ்சலை எழுது” அல்லது “நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதது குறித்து மின்னஞ்சல் எழுத்து” என்று டைப் செய்யலாம்.
எழுதி முடித்ததும் கிரியேட் என்கிற பட்டனை கிளிக் செய்யவும். உடனே ஹெல்ப் மீ ரைட் என்கிற ஏஐ அம்சமானது உங்கள் இமெயிலுக்கான டிராஃப்ட்-ஐ உருவாக்கும். முன்னரே குறிப்பிட்டபடி அந்த இமெயிலில் உள்ள கன்டென்ட்-ஐ உங்களுடைய தேவைக்கேற்ப அப்டேட் செய்யலாம், அதாவது மாற்றி அமைக்கலாம் (அதற்கும் ஏஐ அம்சம் உதவும்). இறுதியாக, ஏஐ உருவாக்கிய இமெயிலில் நீங்கள் திருப்தி அடைந்தவுடன், இன்சர்ட் (Insert) என்கிற விருப்பத்தை கிளிக் செய்து, சென்ட் (Sent) என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான். இந்த அம்சத்தை சிறப்பாக பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ப்ராம்ட்டில் சரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். மீதியை ஹெல்ப் மீ ரைட் பார்த்துக்கொள்ளும்!