மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியானது வருடாந்தம் இயற்கையின் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுவருகிற நிலையில் சட்டவிரோதமாக அகழப்படும் மண்வளத்தையும், இயற்கை அழிவையும் தடுக்கும் முகமாக ‘பனை நடுவோம் பயன்பெறுவோம்’ எனும் தொனிப்பொருளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
இன்றைய தினம் (12) 15000 பனைவிதை நடும் நிகழ்வை சித்தாண்டி சிகன்டி அறக்கட்டளை மற்றும் சித்தாண்டி பகுதிகளிலுள்ள ஆலயங்கள், விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்களின் பங்களிப்புடன்
சித்தாண்டி சந்தனமடு ஆற்றங்கரை பகுதிகளில் பனைவிதைகள் நடுபணிகள் இடம்பெற்றது.
இன்றைய பனைவிதை நடும் நிகழ்வுக்கு சித்தாண்டி பகுதிகளிலுள்ள பல ஆலயங்களின் அறங்காவல் தலைவர்கள், விளையாட்டுக்கழகத்தின் தலைவர்கள், மயிலத்தமடு மாதவணை பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளையின் தலைவர் மு.முரளிதன் கருத்து தெரிவிக்கையில்,
ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக அகழப்படும் மணல் அகழ்வினால் சித்தாண்டியில் வருடா வருடம் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. அத்துடன் மண்ணரிப்பு உள்ளிட்ட பல பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. இவற்றைத்தடுக்கும் முகமாக பலவருட காலமாக 10 லட்சத்துக்கு மேல் பனை விதைகளை நட்டுள்ளோம்.
அத்துடன் அப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றவர்களுக்கு நீதிமன்றம் ஊடாக பனைவிதைகளை நட்டு வளர்க்கும் பொறுப்பையும் வழங்கியுள்ளதுடன் அவ்வாறான செயற்பாடுகளும் நடைபெறுகின்றது.
தற்போது சட்ட விரோத மணல் அகழ்வு நடைபெறுகின்றது என்றார்.
இன்றைய தினம் 15000 பனை விதைகள் நடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.