மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்வனவிற்கான விலையை, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நிர்ணயிக்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா வளாகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது ஒன்றுகூடிய மாவட்டத்தின் பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், நெல் மூடைகளை தமது முதுகில் தாங்கியவாறு, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நோக்கி பேரணியாகச் சென்றிருந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலக முன்றலைச் சென்றடைந்த விவசாயிகளை, மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா சந்தித்தார்.
இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜரை விவசாயிகள் அரசாங்க அதிபரிடம் கைளித்தனர்.
தன்னிடம் கையளிக்கப்பட்ட மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்ததையடுத்து, அங்கிருந்த விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மாவட்டச் செயலகத்திற்கு அருகே, விவசாய அமைச்சரின் உருவப் பொம்மையை எரித்து தமது எதிர்ப்பை விவசாயிகள் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கிளிநொச்சி விவசாயிகளால் போராட்டம் ஒன்று இன்று(28) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெல்லுக்கான விலையினை உரிய நேரத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.