பிரபல ஓடிடி (OTT) தளமான நெட்பிளிக்ஸ் (Netflix) பெரும்பாலான மக்கள் பயன்படுத்திவரும் பேஸிக் பிளானை (Netflix Basic Plan) திடீரென ரத்து செய்துள்ளது. அதோடு ஸ்டாண்டர்ட் பிளான்களில் (Netflix Standard Plan) அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இன்றைய காலத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு செல்லாமல், ஓடிடி தளங்களிலேயே புதிய படங்களை பார்த்து பழகிவிட்டனர். இதனால், ஓடிடி தளங்கள் நம்மிடையே பிரிக்க முடியாத சக்தியாக மாறிவிட்டது. சொல்லப்போனால், மாதம் மாதம் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய பணம் எடுத்து வைப்பதை போலவே, ஓடிடி தளங்களுக்கு மாதாந்திர சந்தா கட்டவும் பணம் எடுத்து வைக்கும் பழக்கத்தை மக்களிடையே பார்க்க முடிகிறது.
அதிலும் ஹாலிவுட் மற்றும் கொரியன் சீரிஸ் பார்க்கவே ஓடிடி தளங்களுக்கு ஒரு கூட்டம் குவிந்து வருகிறது. இதில் நெட்பிளிக்ஸ் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இதில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் மணி ஹீஸ்ட் (Money Heist), ஸ்க்விட் கேம் (Squid Game), ஸ்ட்ரேஞ்ஜர் திங்ஸ் (Stranger Things), வெட்னஸ்டே (Wednesday) போன்ற பல்வேறு சீரிஸ்கள் பல மொழிகளில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றின் அடுத்தடுத்த சீசன்களுக்காகவே கோடிக்கணக்கான சந்தாதார்கள், வேறு ஓடிடி தளங்களுக்கு மாறாமல் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட நெட்பிளிக்ஸ் பிரீமியம் (Premium), பேஸிக் (Basic), ஸ்டாண்டர்ட் (Standard), மொபைல் (Mobile) என்று 4 பிளான்களை வைத்திருக்கிறது. இதில் மொபைல் பிளான் பெரும்பாலான நாடுகளில் கிடையாது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற சில நாடுகளில் மட்டுமே இருக்கிறது. இதனால் உலகளவில் பேஸிக் திட்டம் மட்டுமே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது.
இந்த பிளானை நெட்பிளிக்ஸ் அதிரடியாக நீக்கி சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. முதலில் கனடாவில் பேஸிக் பிளான் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, பேஸிக் பிளானில் இருக்கும் சந்தாதாரர்கள் அந்த பிளானின் வேலிடிட்டி முடியும் வரையில் மட்டுமே அதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அதன்பின்பு, ஸ்டாண்டர்ட் பிளானுக்கு மாற வேண்டியிருக்கும். பேஸிக் பிளானில் தொடர முடியாது. அதோபோல, இனிமேல் பேஸிக் பிளானை புதிதாக யாராலும், பெற முடியாது. அதேபோல ஸ்டாண்டர்ட் பிளானிலும், விளம்பரங்களுடன் கூடிய ஸ்டாண்டர்ட் பிளான் (Standard With Ads) மற்றும் விளம்பரங்கள் அற்ற ஸ்டாண்டர்ட் பிளான் என பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப விலையிலும் மாறுபாடுள்ளது. அந்த வகையில், விளம்பரம் இல்லாத ஸ்டாண்டர்ட் பிளானின் மாதாந்திர கட்டணம் இந்திய ரூபாயில் ரூ.1,304 ஆக இருக்கிறது. இதனால், அந்த நாட்டு நெட்பிளிக்ஸ் சந்தாதாரக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த பேஸிக் பிளான் ரத்தானது, அடுத்த சில மாதங்களில் மேலும் பல நாடுகளில் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல், மொபைல் பிளானை ரத்து செய்துவிட்டு பேஸிக் பிளானில் விளம்பரங்களுடன் ஸ்ட்ரீமிங் செய்யவும், நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.