இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தற்போது அமைதியாக காணப்படுவதாக பொது மக்கள் கருத்து தெரிவித்து வருவதுடன், அவர் தற்போது ஊடக சந்திப்புக்களையும் மற்றும் சில நிகழ்வுகளையும் தவிர்த்து வருவதாகவும் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வியாழேந்திரனின் முகப்புத்தக பக்கம் கூட சற்று மந்த நிலையில் காணப்படுவதாகவும், அவர் தொடர்பான செய்திகள் கூட தற்போது காண்பது அரிது என்றும் மட்டக்களப்பு முகப்புத்தக பாவனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதன் அடிப்படையில் பார்க்கும் போது வியாழேந்திரன் தற்போது அமைதியாக உள்ளாரா? அல்லது
கேள்வி கேட்கும் தரப்பினர்களிடமிருந்து சற்று ஒதுங்கியுள்ளாரா என்று சில கேள்விகள் தோன்றுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஏன் என்றால் வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். இதன் போது பல பக்கங்களிலும் ஏன் மட்டு ஊடக அமையத்தில் கூட அவசர சந்திப்பை ஏற்படுத்திய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், எனது செயலாளர் இலஞ்சம் வாங்கவில்லை என்றும் , தன்னிடம் சிசிடிவி ஆதாரம் உள்ளது, அதை வைத்து அவர்களை வெளியில் கொண்டு வருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் குறித்த கைது நடவடிக்கை நடந்து இன்று வரையில், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவரும் பிணையில் செல்ல கூட நீதிமன்றம் அனுமதியளிக்கவில்லை என்பது இன்னும் பல சந்தேகங்களை எழுப்புவதுடன் ஊடகங்கள் மத்தியில் வியாழேந்திரன் ஆதாரம் உள்ளதாக பொய் கூறினாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.
வியாழேந்திரன் கூறுகின்றார் இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் அவரின் அரசியல் எதிரிகள் மற்றும் மண் மாபியாக்கள் உள்ளார்கள் என்று. அப்படி பார்க்கப்போனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று கூறுகின்றாரா? அப்படியென்றால் இராஜாங்க அமைச்சர் ஆதாரங்கள் வைத்திருந்தும் ஏன் ஒரு மாதமாக வியாழேந்திரனின் செயலாளர் உட்பட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மேல் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு பல ஆதாரங்கள் தேவை இதுவே உண்மை, ஆனால் நடக்கின்றவற்றை பார்க்கும் போது இராஜாங்க அமைச்சரின் தலைமையில் தானா இந்த இலஞ்சம் வாங்கும் செயற்பாடு நடைபெற்றது என்ற இன்னொரு கேள்வியும் இங்கு எழுகிறது.
அதேசமயம் இவை அனைத்திற்கும் மேலாக ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைளில் மட்டுப்பட்ட அளவில் தான் வியாழேந்திரன் கலந்து கொள்கிறாரா என்ற சந்தேகமும் எழுகின்றது. இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் போனால் ஏனைய இராஜாங்க அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டது போல தன்னுடைய அமைச்சு பதவியும் பறிக்கப்படலாம் என்ற அடிப்படையிலும், புது ஜனாதிபதி தெரிவாகும் வரைக்குமாவது தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொள்வதற்குமாக இவ்வாறு செயற்படுகின்றாரா என்றும் கேட்க தோன்றுகின்றது.