குளியாப்பிட்டிய வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்ப்ளி பிரைவேட் லிமிடெட் நவீன வாகனங்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சாலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் (17) திறந்து வைத்தார்.
தெற்காசியாவின் மிகப்பெரிய வாகன ஒருங்கிணைப்புத் தொழிற்சாலையான வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் அசெம்பிளி பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையை ஆரம்பிக்க, 27 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையில் ஒருங்கிணைக்கப்பட்ட 15 ஆசனங்களைக் கொண்ட முதல் வாகனம் இம்மாத இறுதியில் சந்தைக்கு வர உள்ளது.
உலகளாவிய வாகனத்துறைசார் வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்ட மிக உயர்தரத்திலான சர்வதேச இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட இந்தத் தொழிற்சாலை, இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
மேலும், உலகளாவிய தொழில்துறை தேவைகளுக்கு இணங்க, சர்வதேச தரத்திலான தொழிற்பயிற்சி நிறுவனமும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இப்பயிற்சியின் மூலம் இந்நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ”இந்தத் தொழிற்சாலையை நிறுவ 2015 இல் அனுமதி வழங்கியிருந்தோம். ஆனால் அன்றிலிருந்து இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 2019 இல் தொடங்கப்படவிருந்த இந்தத் திட்டம், கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தடைப்பட்டது.
நான் ஜனாதிபதியான பின்னர், இந்தத் திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் ஆரம்பித்து வைத்தேன். அதன்படி நேற்றுமுன்தினம் வெஸ்டர்ன் ஓட்டோமொபைல் நிறுவனத்தின் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 50,000 வாகனங்களை சந்தைக்கு விநியோகிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் நமது ஏற்றுமதித் துறையை வலுப்படுத்த முடியும்.” என மேலும் தெரிவித்துள்ளார்.