மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு பேருக்கு மாத்திரம் தனியான வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த தேர்தல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளர்களுக்காக மாந்தீவிலேயே விசேட வாக்களிப்பு நிலையம் நிறுவப்பட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது குறித்த இரண்டு நோயாளர்களும் மாந்தீவு வைத்தியசாலையில் இல்லை.
இவர்கள் இருவருக்கும் மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் மண்டப இல – 3 இல் வாக்களிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விசேடமாக மேற்கொள்ளப்படவுள்ள இவ் வாக்களிப்பு நிலையத்திற்கு இவர்கள் வருகை தரும் பட்சத்தில் தமது வாக்குகளை பதிவு செய்யலாம் எனவும் பொதுவான வாக்கெடுப்பு நிலையத்தில் பின்பற்றப்படும் சகல நடைமுறைகளும் இங்கு பின்பற்றப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிறைவு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்கு 449,606 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர்கள் வாக்களிப்பதற்காக 442 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.