இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் 50 ஓட்டங்களுக்கு மேல் அடித்து பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீலின் சாதனையைச் சமப்படுத்தியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது முதல் டெஸ்டில் விளையாடியதில் இருந்து, மெண்டிஸ் தனது முதல் ஆறு டெஸ்ட்களில் ஒவ்வொன்றிலும் 50-க்கும் அதிகமான ஓட்டங்களை அடித்தார். காலியில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், மெண்டிஸ் சதம் அடித்தார்.147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன் ஒருமுறை மட்டுமே இந்த சாதனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல் தனது முதல் ஏழு டெஸ்டிலும் 50-க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த முதல் டெஸ்ட் வீரர் ஆனார்.
இதற்கு முன், இந்தியாவின் சுனில் கவாஸ்கர் , பாகிஸ்தானின் சயீத் அகமது , மேற்கிந்தியத் தீவுகளின் பசில் புட்சர் , நியூசிலாந்தின் பெர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் தங்களின் முதல் ஆறு டெஸ்டிலும் தலா அரை சதம் அடித்தனர்.
இரண்டு கைகளாலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு திறமைக்கு பெயர் பெற்ற கமிந்து தனது ஏழாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவர் ஏற்கனவே நான்கு சதங்கள், நான்கு அரை சதங்கள் உட்பட 800 ஓட்டங்களுக்கு மேல்அடித்துள்ளார்.