சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் வரலாற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகை வழங்கும் சகாப்தம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியுடன் உதயமாகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம் நடைபெற்ற ஐசிசி வருடாந்த மாநாட்டில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டிலேயே இருபாலாருக்கும் சம பரிசுத் தொகையை வழங்குவதென ஐசிசி முடிவுசெய்திருந்தது. ஆனால் இப்போது 6 வருடங்களுக்கு முன்னரே அந்தத் தீர்மானத்தை அமுல்படுத்துவதென ஐசிசி முடிவுசெய்துள்ளது.
இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஒட்டுமொத்த பணப்பரிசாக 7.95 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 240 கோடியே 42 இலட்சத்து, 97,000 ரூபா) வழங்கப்படும்.
சம்பினாகும் அணிக்கு 2.34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 70 கோடியே 76 இலட்சத்து, 80,000 ரூபா)பணிப்பரிசாக வழங்கப்படும். இது கடந்த வருடம் சம்பியனான அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை விட 134 வீதம் அதிகமாகும்.
இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 1.17 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 35 கோடியே 38 இலட்சத்து, 40,000 ரூபா) பரிசுத் தொகை வழங்கப்படும். இதுவும் 134 வீத அதிகரிப்பாகும்.
அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 675,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 20 கோடியே 41 இலட்சத்து, 38,000 ரூபா) பணப் பரிசாக கிடைக்கும்.
இதேவேளை, குழுநிலைப் போட்டிகளில் (முதல் சுற்று) ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 31,154 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 94 இலட்சத்து, 21,000 ரூபா) வழங்கப்படும்.
அரை இறுதிக்கு முன்னேறத் தவறும் ஆறு அணிகளுக்கு 1.35 மில்லியன் டொலர்கள் (இலங்கை நாணயப்படி 40 கோடியே 82 இலட்சத்து, 76,000 ரூபா) பகிர்ந்தளிக்கப்படும். ஆனால் அந்த அணிகளின் தரவரசைப்படியே பரிசுத் தொகை அமையும்.
அதேவேளை, ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் பத்து அணிகளுக்கும் 112,500 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 3 கோடியே 40 இலட்சத்து, 23,000 ரூபா) கிடைப்பது நிச்சயம்.
பங்களாதேஷுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் அக்டோபர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் ஆரம்பாகவுள்ளது. ஷார்ஜாவில் அக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அமைய இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும். தொடரும் போட்டியில் பங்களாதேஷ் – இங்கிலாந்து அணிகள் மோதும்.
துபாய் மற்றும் ஷார்ஜா விளையாட்டரங்குகளில் நடைபெறவுள்ள இந்த வருட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மொத்தம் 10 அணிகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளன. மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இறுதிப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் அக்டோபர் 20ஆம் திகதி நடைபெறும். 21ஆம் திகதி ஒதுக்கப்பட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.