இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலகத் தமிழர் பேரவை (GTF) வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து உலகத் தமிழர் பேரவை நேற்று (24) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறுபான்மை மக்களின் நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உலகத் தமிழர் பேரவை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தாழ்மையான பூர்வீகத்திலிருந்து தொடங்கி இன்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அநுரகுமார திசாநாயக்கவின் சாதனை இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்துள்ளது.
பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக தேர்தல் மற்றும் அதிகார பரிமாற்றம் ஆகிய இரண்டும் அமைதியாக நடந்ததில் உலகத் தமிழர் பேரவை மகிழ்ச்சி அடைவதுடன் இந்தத் தேர்தல் பிரசாரம் பெரும்பாலும் இன மற்றும் மத பேரினவாதப் பேச்சுக்கள் இல்லாதது என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.