தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (28) தெரிவித்துள்ளார்.
கண்டியில் பௌத்த மத தலைவர்களை தரிசித்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதேபிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது அரசாங்கத்தின் கீழ் உள்ள அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் அளித்த பதில் வருமாறு,
பொதுத்தேர்தலுக்கு நாம் நன்கு தயாராக வேண்டும், நாட்டை இன்னும் சிறப்பாக மாற்றக்கூடிய ஒரு அணி தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும் அந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளன. எங்களின் ஆட்சியில் யார் மீதும் குற்றம் சாட்டப்பட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம். இதுபோன்ற மாற்றங்கள் தொடரும்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களில் சிலருக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளின் அதிபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று கல்வியின் மீதான நம்பிக்கை உடைந்துவிட்டது.
அந்த உடைந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதுதான் எங்களின் முக்கியமான பணி. குழந்தைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு செல்வதற்கான பின்னணியை உருவாக்க வேண்டும். ஆசிரியர்களும் தங்கள் பணியை மகிழ்ச்சியாகத் தொடர்வதற்கான பின்னணியை வழங்க வேண்டும்.