இந்தியா, தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நேற்று (28) நியமனம் செய்யப்பட்டார். உதயநிதிக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
கட்சியில் செயல்பட ஆரம்பித்து சில காலத்திலேயே துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் மிக மிக அனுபவ அரசியல்வாதியான துரைமுருகன் மற்றும் கட்சிக்காக உழைத்த மூத்த அமைச்சர்கள் யாருக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். அதேசமயம் விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என உதயநிதி பேட்டியளித்துள்ளார்.
இந்த நிலையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள இந்த பொறுப்பு, திமுகவில் அனைத்து இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்த வரை கட்சிக்காக நாள்தோறும் மிகப்பெரிய உழைப்பை செலுத்தி வருகிறார். நிறைய பேர் உதயநிதி அரசியலுக்கு வந்தது 2018, 2019ஆம் ஆண்டு என்றெல்லாம் கூறி வருகிறார்கள். ஆனால், அவர் கருவில் இருந்த போதில் இருந்தே திமுககாரர். பிறந்ததும் முதல் திமுகவின் கொள்கைகளை உள்வாங்கியவர். உதயநிதி சிறு வயதில் இருந்து கொள்கை பிடிப்பு மாறாமல் எப்படி பயணித்தார் என்பதை சிறு வயதில் இருந்து நாங்கள் பார்த்துள்ளோம்.
உதயநிதியின் லயோலா கல்லூரி காலத்தில் 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா தனது வளர்ப்பு மகனுக்கு ஆடம்பர திருமணம் நடத்துவதைக் கண்டித்து குரல் கொடுத்து வீதியில் இறங்கி போராடியவர். கொரோனாவாக இருந்தாலும், மழையாக இருந்தாலும் களத்தில் இறங்கி பணியாற்றக் கூடியவர்.
சட்டமன்ற உறுப்பினராக அவர் ஆற்றிய பணிகளை பார்த்து தான் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சராக இந்தியாவுக்கே உதாரணமாக திகழ்ந்தார். தற்போது வழங்கப்பட்டுள்ள துணை முதல்வர் பொறுப்பு திமுக இளைஞர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்தார்.