கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கைகூலிகளாக பலர் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர். எனவே தமிழர்களின் விகிதாசார அடிப்படையிலுள்ள 6 பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அனைவரும் அணி திரளுமாறு கரம் கூப்பி அழைக்கின்றோம் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் கிழக்குமாகாண உறுப்பினரான இரா. துரைரெட்ணம் அறைகூவல் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடக மாநாடு நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.
இதில் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்,
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வீதாசார அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதியும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு பிரதிநிதி, மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதிநிதிகள் உட்பட 6 தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை எதிர்வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போது தான் தமிழர்களின் இருப்பை பாதுகாக்க முடியும்.
எனவே குறிப்பாக புதிய இளைஞர் சமூகம், படித்த சமூகம், சமூகசேவையில் நாட்டம் கொண்ட அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 குழுக்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிடப் போகின்றனர் அதில் தமிழ் தேசியத்தில் நாட்டமில்லாத அனைவரும் தமிழர்களின் விகிதாசாரம் அடிப்படையில் உள்ள பிரதிநிதித்துவத்தை தடுப்பதற்காக கைகூலிகளாக போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கின்றனர்
அந்த கைகூலிகளின், ஏஜன்டுகளின் மாயவலையில் விழ்ந்துவிடாமல் 4 தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதேவேளை தலைமைகளை வழங்கவும், எதிர்வரும் காலத்தில் தமிழ் தேசியத்தில் நாட்டமுள்ள கட்சிகளுடன் பொதுவான ஒரு இனக்கப்பாட்டிற்கு வருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இன்று மாவட்டத்தை பொறுத்தளவில் தமிழர்களா? கட்சிகளா? என்ற விடையத்தில் மாவட்ட மக்கள் அதிகமாக தமிழர்கள் பிரதிநிதிகளாக வரவேண்டும் என மிகவும் அக்கறையாக இருக்கின்றனர். தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க நாங்கள் தயாரக இருக்கின்றோம். அனைவரும் அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம் என்றார்.