சம காலத்தில் நான் விளையாடிய வீரர்களிலேயே சிறந்த எதிராளி பென் ஸ்டோக்ஸ் தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நாளில் பேர்ஸ்டோவ் ரன் அவுட், அதன் பின்னர் பென் ஸ்டோக்ஸ் எடுத்த விஸ்வரூபம், ஹாட்ரிக் சிக்சர் அடித்து விளாசிய சதம், 6 விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர் சிங்கிள்கள் ஓடாமல் பவுண்டரிகளாக விளாசியது என்று பென் ஸ்டோக்ஸ் களத்தில் பல அசாத்தியங்களை அசால்ட்டாக நிகழ்த்தினார்.
155 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்த போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி மற்றும் கவாஜா உள்ளிட்டோர் நேரடியாக சென்று பென் ஸ்டோக்ஸ் பாராட்டினர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய ரசிகர்கள் உட்பட மைதானத்தில் அமர்ந்திருந்த ஒட்டுமொத்த ரசிகர்கள் எழுந்து நின்று பென் ஸ்டோக்ஸ்-க்கு மரியாதை அளித்தனர். இன்னும் சொல்லப் போனால், வாழ்நாளிற்கான ஒரு இன்னிங்ஸை பென் ஸ்டோக்ஸ் ஆடிச் சென்றார்.
இதுகுறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், நான் கேலியாக சொல்லவில்லை. சம காலத்தில் நான் எதிர்த்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் மிகச்சிறந்தவர் பென் ஸ்டோக்ஸ் தான். மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடி இருக்கிறார். ஆனால் ஆஸ்திரேலிய அணி அதனைவிட சிறப்பாக ஆடி இருக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதனை விராட் கோலி ரசிகர்கள் பலரும் பகிர்ந்து பென் ஸ்டோக்ஸை பாராட்டி வருகின்றனர். அதேபோல் இந்திய அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல், பென் ஸ்டோக்ஸ் புகைப்படத்தை பகிர்ந்து, லெஜண்ட் என்று பாராட்டியுள்ளார். அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், அசாத்தியத்தை கிட்டத்தட்ட பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்திவிட்டதாக பாராட்டியுள்ளார்.