அநுராதபுரம், இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய தொழில்நுட்ப பீடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை பணிப்பாளர் டகஃபுமி கடோனோ ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் அரசாங்கத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனித வள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய பீடத்தின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இதற்காக 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
இதன் கட்டுமானம் 2021 இல் தொடங்கப்பட்டது மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப, கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிற்துறையினரை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
புதிய பீடம் 2 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளதோடு 800 இருக்கைகள் கொண்ட அரங்கம், மூன்று மாடிகளை கொண்ட நூலகம், பல விரிவுரை மண்டபங்கள், அதிநவீன ஆய்வு கூடங்கள் மற்றும் விரிவுரை மண்டபங்கள் உள்ளன.
இந்த பீடத்தின் கீழ், உயிரிச் செயலாக்க தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் இலத்திரனியல் தொழில்நுட்பம், உணவுத் தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் தொழில்நுட்பம் ஆகிய 05 கல்வித் துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கினிகத்தர, அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சத்துரங்க பமுனுஆராச்சிகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.