ஈரான் தாக்குதல்களால் டெல் அவிவ் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முந்திய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை திட்டமிட்டுள்ளவர்கள் உரிய திகதிகளை மாற்றியமைக்குமாறு தூதரகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏதேனும் அபாயகரமான சூழ்நிலை ஏற்படின் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் போர் அச்சம் காரணமாக இஸ்ரேலுக்குச் செல்ல எவரேனும் தயாராக இருந்தால் அந்த வெளிநாட்டு பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.