எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (04) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.
இருபது வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தொகுதியை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதியமைச்சராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் தன்னால் இயன்றவரை மக்களுக்காக உழைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல வருடங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி அநாதரவாக இருந்த ஹோமாகம பிரதேசத்தை அறிவு மையமாக நகராக மாற்றுவதற்கு இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாகவும் அதில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலத்தில் பி.எச்.டி முடித்து திரைப்படமொன்று இயக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.