நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளதால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க உள்ளதாக வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சந்தையில் விலைப்பட்டியல் தொடர்பில் ஆய்வு செய்து விலைகளுக்கிடையிலான வேறுபாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப்பொருள் இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடையில் விலை குறைப்பின் தேவை குறித்து தெளிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது அதன் சுமையை மக்கள் மீது திணிக்கும் போதிலும் அதன் பெறுமதி வலுவடையும் போது நன்மை மக்களுக்கு கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்பு பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.