சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது.
லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள்.
சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும், தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல்.
அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள்.
கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள ஜேவிபி (JVP) யிலிருந்து ஒரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா, ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில் செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார்.
ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஏனெனில் இப்போதுள்ள பெரும் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில், இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று. சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பெரும் குடைசலாகவே இருக்கும். அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும்.
அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை.
உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயாமல் பார்த்துக்கொள்ளவும், அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை.
அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின.
இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் ” சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது” என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர்.
இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன? குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன?
புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும், தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள்.
இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏற்படுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா?
அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை, ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை!
இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை!
ஈழ போடாட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர…
ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்!
ஜேவிபி (JVP) கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.
தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு.
ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்!
அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம்.
நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு!