மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு கிரேக்க பொருளாதாரம் கடும் நெருக்கடியான நிலையை சந்தித்திருந்த நிலையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பணத்தை கிரேக்க பிணைமுறிகளில் முதலீடு செய்தமை காரணமாக நாட்டுக்கு 1.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிக அளவில் நட்டம் ஏற்படுத்தியதாக இந்த நான்கு பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக் குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தலா 10 மில்லியன் பெறுமதியான சரீர பிணைகளின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இந்த சந்தேக நபர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதித்துள்ளதுடன் தங்களது கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் நீதிமன்றின் அனுமதியுடன் பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் பாரிய அளவு நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக அஜித் நிவாட் கப்ரால் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.