பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மாதாந்த பேருந்து பருவக்கால சீட்டை சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பயன்படுத்தி பேருந்துகளில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிப்புரையை போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து சபைத் தலைவருக்கு முன்வைத்துள்ளார்.
விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் பயணத்தில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிடைக்கப்பெற்றுள்ள பல முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இதற்கான ஒரு தீர்வாக குறித்த மாதத்திற்கான பருவச் சீட்டைப் பயன்படுத்தி அம்மாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்துகளில் பயணிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சபையின் தலைவருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்தோடு, அண்மையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்திருந்து.
இந்தநிலையில், அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில், பயணிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிக கட்டணம் வசூலிக்கும் மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பேருந்துகள் தொடர்பாக ஆணைக்குழுவின் 1955என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 071 25 95 555 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாடசாலை மாணவர்களின் பேருந்து பருவகாலச் சீட்டுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.