பொது தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்பு எல்லா கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர் அறிமுகங்களை பிரமாண்டமான முறையில் செய்துவருகின்றனர். அந்த வகையில் வடகிழக்கில் போட்டியிடுகின்ற பிரதான அரசியல் காட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை மிக பெரிய ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் தமிழரசு கட்சி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய இடங்களில் அந்த அறிமுகத்தை செய்துவருகின்றது. நேற்று முன்தினம் (12ஆம் திகதி) செங்கலடி கூட்டுறவு மண்டபத்தில் தமிழரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு ஒன்று இடம்பெற்று இருக்கின்றது.
அந்த நிகழ்வை பார்க்கின்ற பொழுது பல்வேறு கேள்விகள் எழுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியினுடைய வேட்பாளர்கள் 8 பேர் மத்தியில் ஒரு பெண்ணும் போட்டியிடுவதற்கு முன்வந்திருக்கின்றார். ஆனால் அந்த பெண் வேட்பாளருக்கு இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் என்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவொன்றாக இருக்கின்றது.
எல்லா ஆண் வேட்பாளர்களும் கழுத்து நிறைய மாலைகளை சுமந்துகொண்டு இருக்கின்ற போது இந்த பெண் வேட்பாளருக்கு மாத்திரம் ஒரே ஒரு மாலை அணுவிக்கப்பட்டு ஒரு ஓரத்தில் கடைசியாக நிறுத்தப்பட்ட நிலைமை காணப்படுகின்றது. இது உண்மையிலேயே இவரை ஒதுக்கி வைக்கும் தன்மை அல்லது மற்றவர்களுக்கு சமமாக இவரை மதிக்காத தன்மை என்ற அடிப்படையில் இது காணப்படுகின்றது. தமிழரசு கட்சியை பொறுத்தமட்டில் அவர்கள் பெண்களை அரசியலுக்குள்ளே கொண்டுவருவதில் ஆர்வம் இல்லாத கட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
சுமந்திரன் கூறுவதை போல பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்வராமல் இல்லை ஆனால் பெண்கள் முன்வருகின்ற போது அவர்கள் மேல் தேவையில்லாத விமர்சனங்களை முன்வைப்பதும், அவர்களது தனிப்பட்ட வாழ்கையை விமர்சிப்பதும் அதனூடாக அவர்களை ஒதுக்குவதுமே நடந்துவந்திருக்கின்றது.
கடந்த பொது தேர்தல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அப்படி பல தடைகளையும் தாண்டி பெண்கள் முன்வருகின்ற பொழுது அவர்களை தங்களுக்கு வாக்கு சேகரிக்கின்ற ஒருவராக தான் பார்க்கின்றனர். மிகுந்த ஆணாதிக்கம் நிறைந்த கட்சியான தமிழரசு கட்சி பெண்களை உள்வாங்குவதாக சொன்னாலும் அவர்காளால் அதை நேர்மையாகவும், உண்மையாகவும் செய்ய முடியாதவர்களாக தான் இருக்கின்றார்கள்.
இந்நிலைமை பல்வேறு இடங்களில் வெளிப்பட்டும் இருக்கின்றது. செங்கலடி வேட்பாளர் அறிமுகத்திலே அந்த பெண்ணுக்கு சரியான இடம் கொடுக்காமல் சமத்துவத்தை பேணாமல் வைத்திருந்தது இன்னுமொரு உதாரணம்.
பல்வேறு இடங்களிலே சுமந்திரன் பேசுகின்ற பொழுது பெண்களை பொதுத்தேர்தலில் போட்டியிட வைப்பதற்காக காடு,மேடுகளில் எல்லாம் தேடித்திரிவதாக கூறுகின்றார். அப்படியானால் சுமந்திரனின் பார்வையிலே பெண்கள் காடு மேடுகளில் தேடுகின்ற ஒரு ஜீவராசியா? விலங்குகளா? இது கூட பெண்கள் தொடர்பான தமிழரசு கட்சியின் இன்னொரு நிலைப்பாட்டை காட்டுவதோடு பெண்களை தேவையற்றவர்களாக பார்ப்பதாகவே அர்த்தம் கொள்ளவேண்டி இருக்கின்றது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் தமிழரசு கட்சியினுடைய ஆரம்ப கால வரலாற்றில் அவர்கள் பெண்களை பின்தள்ளியே வைத்திருந்தமையும் அவர்களை போடுகாய் போல பாவித்ததும் இன்னுமொரு காரணம்.
அந்த அடிப்படையில் தான் மட்டக்களப்பிலே போட்டியிடுவதற்காக முன்வந்திருக்கின்ற அவர்களின் வேட்பாளர் பட்டியலிலே இருக்கின்ற அந்த பெண்ணை பார்க்கின்ற போது ஒரு போடுகாய் போல அவரை அவர்கள் நடத்துவதாகவே அந்த படங்களை பார்க்கின்ற பொழுது தெரிய வருகின்றது. இவைகளெல்லாம் அரசியலுக்காக அவர்கள் செய்யும் நாடகமாக இருக்குமானால் அவர்கள் உண்மையிலேயே ஒரு நேர்மையான அரசியல்வாதிகள் இல்லை என்பதும், பெண்களை மதிப்பவர்கள் இல்லை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
இதையெல்லாம் பார்க்கும் பொழுது பட்டுக்கோட்டையார் சொன்ன பாடல்வரிகள் தான் ஞாபகம் வருகின்றன. ”எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே”