எதிர்வரும் சனிக்கிழமை நாட்டுக்கு கடவுச்சீட்டுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட கடவுச்சீட்டுகளை திங்கட்கிழமை முதல் விநியோகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (15) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு இன்னும் நடைமுறையில் இருக்கின்றது. அதனால் அதற்கான கேள்வி பத்திரம் கோரப்பட மாட்டாது.
நீதிமன்ற உத்தரவு நிறைவடைந்த பின்னர் இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் பணிகள் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் கடந்த 11ஆம் திகதி அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
இதனால், நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும் என நம்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.