வடக்கு தொடருந்து மார்க்கத்தில் சேவைகளை ஆரம்பிப்பது குறித்து தொடருந்து திணைக்களம் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் வடக்கிற்கான தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ்தேவி தொடருந்தை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு தொடருந்து மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது தொடருந்து சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இதேவேளை மஹவ முதல் அனுராதபுரம் வரையிலான தொடருந்து பாதையை எதிர்வரும் 22ம் திகதி திறக்கவுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும், பழுதுகளை சரி செய்வதற்காக ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச வேகத்தில் தொடருந்தை இயக்கவும் பொது முகாமையாளர் அறிவுறுத்தினார்.
இதன் காரணமாக 64 கிலோமீற்றர் தூரத்தை ஒரு மணித்தியாலத்தில் கடக்கும் முயற்சி இரண்டரை மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.