அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வைத்தியசாலையில் புதிதாக ஆய்வுக்கூடத்தில் இரத்த பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த பரிசோதகரை தெல்லிப்பழைக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்துக்கு புதிதாக ஒருவரை நியமிக்க இரண்டு மாதங்களுக்கு மேலாகும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் இரத்த மாதிரிகளை வேறிடங்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் அல்லது நோயாளர்கள் பணம் கொடுத்து வேறு இடங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வைத்தியசாலையில் டெங்கு பரிசோதனை, மலேரியா பரிசோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாற்றப்படும் பரிசோதனைகளுக்கு மாற்றீடாக எவரும் நியமிக்கப்படவில்லை.
எனவே இதற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வைத்தியசாலையில் கடமையில் உள்ள வைத்தியர்களுக்கு எதிராக களவு, ஊழல் மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.