மட்டக்களப்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் பெண்களுக்கு சரியான முறையில் ஒதுக்கவில்லை. அதேவேளை உள்ளக ஜனநாயத்தை மதிக்க கூடிய அரசியல்வாதிகள் மிகவும் குறைவு என்பதுடன் எதிர் தரப்பினருக்கு கட்சியில் போட்டியிடுபவர்களுக்கு அல்லது ஒரே கட்சியல் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராக அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெறுப்பு ஊட்டக்கூடிய சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருப்பதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
காத்தான்குடியில் உள்ள கபே அமைப்பின் காரியாலயத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வருட ஆரம்பித்தில் கபே அமைப்பு இந்த வருடம் தேர்தல் வருடம் என குறிப்பிடப்பட்டிருந்தது அது உண்மையில் தேர்தல் வருடம். இருந்தபோதும் இதேபோன்று 2023 ம் ஆரம்பிக்கும் போதும் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் வருடம் என குறிப்பிட்டிருந்தனர் ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடாத்துவதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை வேட்புமனு மனுக்கள் சமர்ப்பித்து தேர்தல் பிரச்சார நடவடிக்கை நடைபெற்று தேர்தல் அண்மிக்கும் போது தேர்தல் பிற்போடப்பட்டதை அறிவோம்.
அதேபோன்று இந்தவருடம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்ட போதும் வாக்காளர் மற்றும் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் காணப்பட்டது தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற சந்தேகம் காணப்பட்டது ஆனால் அதற்கு முற்றுப் புள்ளி கிடைக்கப்பெற்றது தேர்தல் உரிய தினத்தில் நடாத்தப்பட்டது.
அதேபோன்று தேர்தல் நடைபெற்ற பின்னரான காலப்பகுதியில் இன்னும் ஒரு தேர்தல் ஆரம்பிப்பித்தது, அதுதான் எதிர்வரும் 14ம் திகதி நாடாளுமன்ற தேர்தல். கபே அமைப்பு 2008ம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலப்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற எல்லா தேர்தல்களின் போது தேர்தல் கண்காணிப்பினை நடாத்தி வருகின்றது. இதனடிப்படையில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கண்காணிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம்
இந்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பாளர்களாக 26 மாவட்ட இணைப்பாளர்களை நிறுவி இருக்கின்றோம் அதேபோன்ற 175 நீண்டகால கண்காணிப்பாளர்கள் நிறுவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதுடன் தேர்தல் தினத்தில் 2500 பேரை கண்காணிப்பாளர்களாக நிறுவி கண்காணிப்பினை முன்னெடுக்க இருக்கின்றோம்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 கண்காணிப்பாளர்களை நிறுவ உள்ளோம் அதேவேளை இரண்டு நிகழ்சி திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம் அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வாக்காளர்களை அறிவூட்டுவது அதில் தேர்தலில் வாக்களிக்கும் விதம் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் போன்ற விடையங்களை அறிவூட்டுவது
இரண்டாவது இந்த தேர்தலிலே ஏராளமான அபேட்சகர்கள் இருக்கின்றபோது கட்சிக்கே சுயேச்சை குழுவுக்கே வாக்குகளை வழங்கி விருப்பு வாக்கு வழங்கும் சந்தர்ப்பத்தில் சிந்தித்து நல்ல அபேட்சகர்களை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் என்ற இந்த 18 பிளஸ் வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய வாக்காளர்களுக்கு தெளிவூட்டவுள்ளோம்
கடந்த கால தேர்தல்களில் பல்வேறு அசௌகரியங்களை முதலாவது தடவை வாக்களிக்கின்றவர்கள். எதிர் நோக்கியிருக்கின்றனர் என்பதை எமது கண்காணிப்பின் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தேர்தல் பிரச்சாரத்தின் போது நிதியினை மட்டுப்படுத்துகின்ற அல்லது ஒவ்வொரு அபேட்சகரும் பிரச்சாத்தின் போது செலவளிக்கும் தொகைகளை கண்காணிப்பதற்கு மட்டக்களிப்பில் 3 தேர்தல் தொகுதியில் கண்காணப்பாளர்களை நியமித்து அவர்கள் இந்த தேர்ததில் எவ்வளவு செலவு செய்துள்ளார் என கணக்கெடுப்பு செய்ய கண்காணிக்கப்படும்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் மிகவும் சுமூகமான அமைதியான சமாதானமான ஒரு தேர்தலின் 3 கலகட்டமும் காணப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலை பார்க்கும் போது இப்போதே சமூக வலைத்தளங்கள் ஊடாக எதிர் தரப்பினருக்கு கட்சியில் போட்டியிடுபவர்களுக்கு அல்லது ஒரே கட்சியல் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது
எனவே தேர்தலிலே வன்முறையற்ற தேர்தலுக்காக சமாதானமான தேர்தலுக்கு ஒன்றுபடுவோம் என்ற தொனிப் பொருளில் அரசியல்வாதிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட அரசியல் ஆதரவாளர்கள் அனைவரையும் ஓர் இடத்திற்கு அழைத்து அதனூடாக மக்களுக்கு ஒரு செய்தியை எடுத்துச் சொல்லவுள்ளோம் அரசியல்கட்சிகளின் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்தலிலே சமாதானமாக பிரச்சார நடவடிக்கையை ஈடுபடுகின்றர்களே அதே போன்று ஆதரவாளர்களும் தேர்தலிலே அமைதியினை கடைப்பிடித்து சமாதானமான தேர்தலுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற செய்தியை சொல்லவுள்ளோம்.
இலங்கையிலே நூற்றுக்கு 50 வீதம் பெண்வாக்காளர்கள் காணப்படுகின்றனர். ஆனால் வேட்பு மனுதாக்கல் செய்யும் சந்தர்ப்பத்தில் பெண்களுக்குரிய சரியான முறையில் ஒதுக்கப்படாமல் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. சில கட்சிகளில் சுயேச்சைக் குழுக்களில் பெயரளவில் ஒரு பெண் அபேட்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கையிலே அனைத்து அரசியல் வாதிகளும் உயர் மட்டத்தில் இருக்க கூடிய தலைவர்களாக இருக்கலாம். அரசியல்கட்சிகளின் செயலாளர்களாக இருக்கலாம். ஜனநாயகம் என்று மேடைகளிலும் ஊடகங்களிலும் கதைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் உள்ளக ஜனநாயத்தை மதிக்க கூடிய அரசியல்வாதிகள் மிகவும் குறைவானதாக காணப்படுகின்றது
உள்ளக ஜனநாயகத்தை மதிக்க கூடிய அரசியல்கட்சிகளாக இருந்தால் தேர்தலிலே போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கின்றபோது அந்த சந்தர்ப்பத்தில் நிச்சயமாக பெண்களுக்கும் சந்தர்ப்பம் சரியான முறையில் ஒதுக்கப்பட்டிருக்கும். அதனை இம்முறை வேட்பு மனுக்களை பார்க்கின்றபோது துரதிஸ்டவசமாக பெண்களுக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாக காணப்படுகின்றது என்றார்.